ஞாயிறு, 8 ஜூலை, 2012

யாழ்ப்பாணமும் பத்திரிக்கை கலாச்சாரமும்!!!


யாழ்ப்பாணத்தில் பத்திரிக்கை கலாசாரம் என்பது ஏனைய இடங்களை விட சற்று தூக்கலாக தான் இருக்கும். காரணம் அங்கு நிலவிய போர்ச்சூழல் தான். என்னதான் யாழில் இருந்து  பல பத்திரிகைகள் வெளிவந்தாலும் உதயன் பத்திரிகைக்கு இருந்த மவுசே தனிதான். அநேகமான  யாழ்பானத்தவர் களின்    விடியல்கள்   காலை தேனீருடன் சுடச் சுட உதயன் பத்திரிகையை புரட்டி படிப்பதுடனேயே ஆரம்பிக்கும். யாழ்ப்பாணத்து பலசரக்கு கடைகள் 
விடிகாலையிலேயே  பரபரப்பாகிவிடும் , பத்திரிக்கை வாங்க வரும் கும்பல்களுடன். 


எங்கள் வீட்டிற்கு ஒருவர் 6 மணியளவில் உதயன் பத்திரிகையை gate மேலாக வீசி விட்டுச்செல்வார். அதற்கு முன்னமே நான் எழுந்து எப்படா அவன் வந்து வீசிவிட்டு போவான் எண்டு பார்த்துக்கொண்டிருப்பேன். யார் முதலில் பத்திரிகையை எடுப்பது என்று ஒரு பெரும் போட்டியே இடம்பெறும். காரணம் முதலில் எடுப்பவர் புரட்டி புரட்டி வாசித்து முடிக்கும் வரை மற்றவர் பொறுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் நானாக இருந்தால் வேண்டுமென்றே  படித்த  செய்தியையே திரும்பத் திரும்ப படிப்பேன். மற்றவர்களை வெறுப்பேற்ற! 



யாழ் பத்திரிகைகள் முழுக்க முழுக்க போர்ச் செய்திகள் பேச்சு வார்த்தை செய்திகளையே தாங்கி வரும். மிச்சம் தான் கண்ணீர் அஞ்சலிகளும், மரண அறிவித்தல்களும்.
எல்லோரும் போர்ச்செய்திகலையே விரும்பி விரும்பி படிப்பார். அதுவும் மிகவும் பரபரப்பாக மூர்க்கமாக போர் இடம் பெற்ற கால பகுதிகள். பத்திரிகைகாரர்கள் புகுந்து விளயாடிவிடுவர்.  உதாரணமாக   ஒரு சாதாரண துப்பாக்கிபிரயோகம் இடம் பெற்றால் கூட அதை "அதிர்கிறது மானிப்பாய்!!!!!! அதிகாலையில் அதிரடித்தாக்குதல்!!! இச்செய்தி அச்சுக்குப் போகும் வரை சேத விபரங்கள் வெளியாகவில்லை" எண்டு  நகரத்தையே அல்லோலகல்லோலப் படுத்திவிடுவார்கள். அதையே இன்னும் சில பெருசுகள்  மானிப்பாயில  புகுந்து பிடிச்சிட்டாங்களாம்,சரியான இழப்பாம் என்றெல்லாம் கதைய கட்டிவிட்டுடுங்கள்!  மறுநாள் அப்படியே அதை அமுக்கி விட்டு வேறு பரபரப்பு செய்தியை போடுவாங்கள்!
எங்கெங்க நேற்று மோதல் இடம் பெற்றது, எவர் தரப்பில் என்னென இழப்பு, யார் யார் எதை எதையெல்லாம் கைப்பற்றினார்கள், இதை பற்றி அவங்கட தரப்பு என்ன சொல்லுது, இவங்கட தரப்பு என்ன சொல்லுது என்றெல்லாம்  எழுதி பத்து பக்கத்தையும் நிறைசிட்டு, எஞ்சியவற்றில் கண்ணீர் அஞ்சலி, மரண அறிவித்தல், பாராட்டி வாழ்த்துகிறோம் எண்டு பத்திரிகையை விற்று போடுவார்கள். போதாக்குறைக்கு ராணுவ நடவடிக்கைகள் பற்றி இவர்களின் ஆக்கங்கள் வேறு இதயெல்லாம்  நம்பினோமோ இல்லையோ சுடச் சுட சூட்டோடு சூட்டாக வாசித்து விட்டு, பள்ளிகளில் இதை பற்றி அலசி ஆராய்ந்து விடுவோம்!!

பொதுவாக மாணவர்களின் பத்திரிக்கை தேடல் என்பது ஹர்த்தால்  பற்றியே  இருக்கும். யாழ்ப்பாணத்தில் அடிக்கடி ஹர்த்தால்களை இருதரப்பினரும் அனுசரித்து மாணவகளை சிறப்பித்தனர். பொதுவாக ஹர்த்தால் நடக்க போகுது எண்டு முதலிலேயே ஒரு ஊகம் ஒன்று இருக்கும். இருந்தாலும் அதை உறுதிபடுத்திக்கொல்வதட்காக  அதிகாலையில்  முழுசி முழுசி பத்திரிகைகளை புரட்டுவதுண்டு. சில நேரங்களில் இறுதி நேரத்தில் ஹர்த்தால் ரத்தாகி விடும். அச்சந்தர்ப்பங்களில் பத்திரிகைகளை நொந்து கொள்வோம். எந்த தரப்பு ஹர்த்தாலை நடாத்தினாலும் வஞ்சகம் இல்லாமல் நாம் ஹர்த்தால்களை வரவேற்ற்பதுண்டு. பொதுவாக பள்ளி விடுமுறைகளை  விட  ஹர்த்தால்களே எமக்கு கை  கொடுத்ததுண்டு. அதுவும் வீட்டு வேலைகள், ஒப்படைகள் முடியாத நேரங்களில் ஹர்த்தால்கள் வந்து விட்டால் சொல்லவும் வேண்டுமா???/ பிறகென்ன நண்பர்களுடன் துடுப்பு மட்டையுடன்  அண்ணன் ரோமேசானந்தாவின் வீட்டிற்கு  சென்று மறுநாள் விடியும் வரை விடிய விடிய மட்டையடிதான்!(இப்படித் தான் நாம் நாசமாக போனோம்)


இப்போதெல்லாம் போர் முடிந்து அச்செய்திகளே  இல்லாமல் போன பின்பு இப்பத்திரிகைகள் படும் பாடு தான் கவலையாக உள்ளது,  "பஸ் பறந்தது!! பயணிகள் படுகாயம்" "வெங்காய விலை இரவோடிரவாக அதிகரிப்பு" என்றெல்லாம் செய்திகளை எழுதி  காலத்தை ஓட்டுகிறார்கள்!!!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக